“உறவினர்கள் ஏமாற்றிவிட்டார்கள்” - கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்!


கும்பகோணம்: கும்பகோணம் மாதுளம்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தாமரை (41). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் அழகுக் கலை நிபுணராக இருந்துள்ளார்.

இந்த நிலையில், தான் வெளிநாட்டில் ஊதியமாக சம்பாதித்த கொடுத்த பணம் மற்றும் நகைகளை உறவினர்கள் ஏமாற்றி விட்டதாக போலீஸில் புகார் கொடுத்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 9ம் தேதி மதியம் கும்பகோணம் நீதிமன்றம் முன்பு திடீரென சாலையின் குறுக்கே நின்று கொண்டு போலீஸார் தன் மீது பொய் வழக்குப் பதிவதாகவும், தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுவதாக மறியலில் ஈடுபட்டார்.

இதையறிந்த போலீஸார், செந்தாமரையை சாலையோரத்துக்கு அழைத்து வந்தபோது போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலையில் படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த கிழக்கு போலீஸார், பெண் காவலர் உதவியுடன் செந்தாமரையை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீதிமன்ற முன்பு பெண் ஒருவர் திடீரென மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

x