பழிக்குப் பழியா? கும்பகோணத்தில் இளைஞரை கொலை செய்ய முயன்ற 8 பேர் கைது


கைது செய்யப்பட்டவர்கள்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் காரைக்கால் சாலை சீனிவாசநல்லூரில், இளைஞரை பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ய முயன்ற 8 பேரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் வட்டம் முத்துபிள்ளைமண்டபம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (24). இவர் பாஜக நலத்திட்டப் பிரிவு மாநகர்ச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இவரது பெயர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ளது.

இந்த நிலையில், 7ம் தேதி சரண்ராஜ், வழக்குத் தொடர்பாக திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்குச் சென்று விட்டு, தனது நண்பருடன் சீனிவாசநல்லூர் சாலை வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத சிலர், சரண் ராஜை பயங்கரமான ஆயுதங்களால் வெட்டி விட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பாக திருநீலக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரண் ராஜை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சரண்ராஜை வெட்டிய சகோதரர்களான செக்காங்கண்ணி தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார் (22), சூர்யா (24), திருவலஞ்சுழி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அண்ணாதுரை (30), ஆகியோர் எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து விழுந்ததில், கால் மற்றும் கை முறிந்ததால், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் போலீஸாரின் பாதுகாப்புடன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பழவத்தான்கட்டளை, ஒத்தத் தெருவைச் சேர்ந்த விஷ்வாஸ் (24), துக்காம்பாளையத் தெருவைச் சேர்ந்த மாதவன் (19), திருப்புறம்பியம், உத்திரைத் தெருவைச் சேர்ந்த தமிழரசன் (22), இதே பகுதியைச் சேர்ந்தவர்களான அரவிந்த் (18), நித்திஷ் (19) ஆகிய 5 பேரை திருவிடைமருதூர் கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள பிரதான குற்றவாளி எனக் கூறப்படும் மாயா (என்கிற) சிலம்பரசனை போலீஸார் தேடி வருகின்றனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கும்பகோணம் பெரியக் கடைத்தெருவில் இடம் தொடர்பாக மாயா என்பவர் பஞ்சாயத்து செய்துள்ளார். இதில் சரண்ராஜ் தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயா தனது கூட்டாளிகளைக் கொண்டு சரண்ராஜை வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார் என்று போலீஸார் கூறினர்.

இதனிடையே, திருவிடைமருதூர் வட்டம் காங்கேயன்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஷால் (17) கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பருடன் திருப்புவனம், கடைத்தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், விஷாலை, பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டுத் தப்பியுள்ளனர். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஷாலை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில், சரண்ராஜை கொலை செய்ய முயன்றது தொடர்பாக, பழித்தீப்பதற்காக இந்த கொலை முயற்சி நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை முயற்சி தொடர்பாக மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x