ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறை: தமிழக ரயில்வே காவல் எச்சரிக்கை


சென்னை: ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக ரயில்வே காவல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 4-ம் தேதி நடந்துசென்று கொண்டிருந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் என்பவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈஸ்வர், ஹரிபிரசாத், கமலேஸ்வரன், ஆல்பர்ட், யுவராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுந்தர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவுகளில் ரயில்வே காவல் துறை வழக்குப் பதிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இனிவரும் காலங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் இருக்கும் வகையில், ரயில்வே காவல் துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தமிழகரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர்கள் கர்ணன், ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையிலான புதிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

ஏற்கெனவே, தொடர்ந்து பலவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். கல்லூரி நிர்வாகத்திலும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல் துறை சார்பில்வலியுறுத்தியுள்ளோம். கல்லூரி நிர்வாகம் சார்பில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போதைய புதிய சட்டத்தின் அடிப்படையில், டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தாலே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் மீது வழக்குப் பதிந்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம். ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால், பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x