பெரியகுளத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது: ரூ.90 ஆயிரம் அபராதம்


பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை கொண்டு சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ளது தொண்டகத்தி வனப்பகுதி. இங்கு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக தேவதானப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனத் துறையினர் இன்று (அக்.8) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நான்கு பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் வேட்டையாடிய காட்டுப் பன்றியின் இறைச்சி இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா (28), சுரேஷ் (26), பாண்டி (24), சோணைமுத்து (55) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 10 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள், வேட்டைக்குப் பயன்படுத்திய அருவாள், கத்தி, சுருக்கு கம்பி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது வன விலங்கு வேட்டையாடுதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

x