பாபநாசம் அருகே சாமி சிலைகளை அடகு பிடித்தவர் கைது: 5 சிலைகளும், பெரிய மணியும் மீட்பு


கும்பகோணம்: பாபநாசம் வட்டம் ஆதனூரில் சாமி சிலைகளை அடகு பிடித்தவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 உலோகச் சிலைகளும் ஒரு பெரிய மணியும் மீட்கப்பட்டன.

ஆதனூரில் தனி நபர் ஒருவர் உலோகத்தால் ஆன சாமி சிலைகளை அடகு பிடித்து ஏராளமான சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கபிஸ்தலம் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்தத் தகவலின் பேரில், போலீஸார், ஆதனூர் பிரதானச் சாலையைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் இருந்து சாரதாம்பாள், ஆண்டாள், சிவன், பெருமாள் உள்ளிட்ட 5 சாமி சிலைகளும், ஒரு பெரிய மணியும் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜேந்திரனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த சிலைகளையும் மணியையும் மீட்டனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கபிஸ்தலம் போலீஸார் கூறியதாவது, "சுவாமி மலையில் சிலைகள் வடிவமைக்கும் ஸ்தபதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். இவர்கள், தங்களுக்கு கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு சிலைகளை வடிவமைப்பார்கள். பின்னர், அந்தத் சிலைகளை, தனியாரிடம் விற்பனை செய்வார்கள். சிலர், கடன் வாங்கி சிலைகள் செய்ய ஆர்டர் கொடுப்பார்கள்.

அப்படி கடன் வாங்கி செய்து முடித்த சிலைகள் விற்காமல் தேங்கினாலோ அல்லது வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் வந்தாலோ வேறு வழியில்லாமல், தங்களுக்கு அறிமுகமானவரிடம், அந்தச் சிலையை அடகு வைப்பார்கள். இது காலம் காலமாக நடைபெறுவதாகும். அடகு வைத்த சிலைகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை வந்தால், அந்த சிலைகளை வாங்குவோரிடம் முன்தொகை பெற்றுக் கொண்டு, அடகுக் கடைகாரரிடம் அதைச் செலுத்தி சிலையை மீட்டு விற்பனை செய்வார்கள்.

அப்படி ஸ்தபதிகள் சிலைகளை அடகு வைத்து வந்த நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த சிலர், சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி-க்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். அதனால் அவரது உத்தரவின் பேரில் ராஜேந்திரனைக் கைது செய்து. அவரிடம் இருந்த சிலைகளை மீட்டுள்ளோம்" என்று போலீஸார் கூறினர்.

x