போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த திருநங்கை உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு


மதுரை: முறைகேடாக அரசு பணியில் சேர்ந்ததாக நீதிமன்ற உத்தரவின்பேரில், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்பட 9 பேர் மீது மதுரை ஊழல் தடுப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில், குரூப்-1 தேர்வு நடந்தது. இத்தேர்வில் தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கான பணி ஒதுக்கீட்டில் அரசுப் பணி பெற்ற சிலர் தேர்வில் முறைகேடு செய்திருப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உயர் நிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார் குறித்து விசாரணை நடத்த மதுரை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது. இதன்பேரில், ஊழல் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று தேர்ச்சி பெற்று குரூப்-1 தேர்வில் அரசுப்பணி பெற்ற 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதன்படி, மதுரையில் வணிக வரித்துறை உதவி ஆணையராக பணிபுரியும் திருநங்கை சொப்னா, கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளராக பணிபுரிந்து வரும் சங்கீதா, சேலம் மாவட்டம் ஆத்தூர் சரக போலீஸ் டிஎஸ்பியாக பணிபுரியும் சதீஷ்குமார், முன்னாள் போலீஸ் துணை சூப்பிரண்டும், தற்போதைய காஞ்சிபுரம் பயிற்சி ஆர்டிஓ கலைவாணி ஆகிய 4 பேர் போலி சான்றிதழ்கள் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது.

இவர்களில் சொப்னா, இளங்கலை படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டை மதுரையிலுள்ள வெவ்வேறு கல்லூரிகளில் பயின்ற நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் இளங்கலை தமிழ் படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும் , ஒரே ஆண்டில் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியும் பெற்றுள்ளார். இது, பல்கலைக்கழக விதிகளின்படி பல்கலைக்கழகத்தில் படிப்பில் சேரும்போதே கல்விக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் முறையாக செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.

இது போன்று, துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமாரின் மதிப்பெண் பட்டியலில் பல்வேறு திருத்தங்கள் உள்ளன. காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கலைவாணி, கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் சங்கீதா ஆகியோரும் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் சேர்க்கை மற்றும் கல்விக்கட்டணங்களை முறையாக செலுத்தாமல் தேர்வெழுதி தமிழ்வழிக்கல்வி சான்றிதழ் பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு முறைகேடாக தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் வழங்க உடந்தையாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தொலைநிலைக்கல்வி இயக்கக எஸ்சி, எஸ்டி பிரிவு கண்காணிப்பாளர் புருசோத்தமன், தேனியைச் சேர்ந்த கல்வி நிறுவன நிர்வாகிகள் முரளி, நாராயணபிரபு, கோவை கல்வி நிறுவன நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோரும் இருந்துள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து முறைகேடாக அரசு பணியில் சேர்ந்ததாக சொப்னா 4 பேர் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 பேர் என மொத்தம் 9 பேர் மீதும், மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

x