‘11 முறை மனு அளித்தும் பயனில்லை...’ - கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் ஆவேசமடைந்த நபரால் பரபரப்பு


தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வேன் என ஆட்சியர் முன் ஆவேசமடைந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் செல்லும் போலீஸார்.

கள்ளக்குறிச்சி: மரக்கன்று கொள்முதல் செய்ததற்கான தொகையை வழங்கக்கோரி என 11 முறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தும் பயனில்லாத நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் தீக்குளிப்பேன் என ஆவேசமடைந்த நபரை கள்ளக்குறிச்சிப் போலீஸார் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அருகே ஒல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், அதே கிராமத்தில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் தோட்டம் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன் இவரிடமிருந்து திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஒப்பந்தம் பெறப்பட்டு மரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட மரக்கன்றுகளை ரூ.3 லட்சம் பணத்தை இதுவரை அவருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

தனக்கான ரூ.3லட்சம் அரசு கொள்முதல் செய்த மரக்கன்றுக்கான பணத்தை வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று பலமுறை முறையிட்டும், கொள்முதல் செய்ததற்கான பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை 11 முறை மனு அளித்துள்ளார். அப்போதும் அவருக்கு அந்த பணத்தை திரும்பி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து எனக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளார். அப்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 11 முறை மனு அளித்தும் இதுவரை பணம் வழக்காததால் நான் வெளியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்வேன் என ஆவேசப்பட்டுள்ளார்.

இதனால் பரபரப்பான அரசு அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொள்வேன் என மிரட்டியதால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொள்வேன் என மிரட்டிய நபரை குண்டுகட்டாக இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் போலீஸார்.

இதுகுறித்து திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, நாங்கள் நேரடியாக கொள்முதல் செய்யவில்லை. மணிகண்டனிடம் இருந்து திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தான் நேரடியாக மரக்கன்றுகள் கொள்முதல் செய்தனர். அவர்கள் பணம் வழங்கியிருக்க வேண்டும். இதுதொடர்பான கோப்புகளுடன் இன்று ஆட்சியரை சந்தித்து விளக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.

x