பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழுக்களை உருவாக்க நெல்லையில் டிஐஜி தலைமையில் ஆலோசனை


திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழுக்களை உருவாக்க திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் முன்னிலை வகித்தார். எம்பவர் இந்தியா கௌரவ செயலரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ. சங்கர் கருத்துரை வழங்கினார்.

போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிகப்படுத்தவும், போதை பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிகள், கல்லூரிகளில் போதைக்கு எதிரான மாணவர் குழுக்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை உள்ளிட்ட இதர மாணவர் இயக்கங்கள் மூலமாக, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும், தமிழக அரசு சிறப்பு தன்னார்வலர் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதன்படி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களில் போதை பொருள் தடுப்பு குழுக்களை உருவாக்குவது தொடர்பாக, கல்வி நிறுவனங்களின் முதல்வர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டத்தை திருநெல்வேலியில் நடத்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு குழுக்களின் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், மாணவ, மாணவியர் ஒருங்கிணைப் பாளர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கை 4 மாவட்டங்களில் நடத்தவும், கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும், தொடர் செயல்பாடுகளை மேம்படுத்த அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் ரவீந்திரன், அண்ணா பல்கலைக்கழக டீன் செண்பக விநாயக மூர்த்தி, மாவட்ட மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர்கள் மீனாட்சி நாதன் (திருநெல்வேலி), அருள் (தூத்துக்குடி), சந்திரசேகரன் (கன்னியாகுமரி), காவல் ஆய்வாளர் கபீர் தாசன் (திருநெல்வேலி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x