கோவை: சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து, கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் 96 கிராமங்களில் பொதுமக்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளி்ல் பேரூர், பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, மேட்டுப் பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 6 உட்கோட்டங்கள் உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் உள்ளன. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், மாவட்ட காவல்துறையினர் சார்பில், ரோந்துப் பணியில் ஈடுபடுதல், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, மாவட்ட காவல்துறையினர் சார்பில், ‘பப்ளிக் கம்யூனிட்டி மீட்டிங்’ என்ற தலைப்பில் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று முன்தினமும், நேற்றும் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட 96 கிராமங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் காவல் துறையினர் சார்பில் இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் அந்த கிராமத்துக்குட்பட்ட காவல் நிலையங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் இன்று (அக்.07) கூறியதாவது: "கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க, காவல்துறையுடன் அனைவரும் இணைந்து முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கிராமப் பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், காவல் உதவி செயலி, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி ஆகியவை குறித்தும், பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் இந்தக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், காவல் உதவி செயலியில், பொதுமக்கள் காவல் நிலையத்தின் இருப்பிடத்தை அறியும் வசதி, கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள், ஆன்லைன் மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்கும் எண் உள்ளிட்டவை, அவசர கால எச்சரிக்கைகள் உள்ளிட்டவை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டங்களில் பொதுமக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
குற்றங்களை தடுக்க ரோந்துப் பணியை தீவிரப் படுத்த வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்" என்று காவல்துறையினர் கூறினர்.