பாட்னா: பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் உள்ள தனது அரசு பங்களாவில் இருந்து ஏசி, படுக்கை போன்றவற்றை திருடிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அரசு பங்களாவை காலி செய்த பிஹார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஏசி, படுக்கை, குழாய்கள் மற்றும் வாஷ் பேஷன் போன்ற பொருட்களை எடுத்துச் சென்றதாக பாஜக செய்தித் தொடர்பாளர் டேனிஷ் இக்பால் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் பொருட்கள் குறித்த கூடுதல் விவரங்களை பாஜக விரைவில் வெளியிடும் என்றும், கட்டிடக் கட்டுமானத் துறை கொடுத்த சாமான்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என்றும் இக்பால் கூறினார். தற்போது பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு இந்த அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவாரி, “மலிவான அரசியல் செய்வதன் மூலம், தேஜஸ்வி யாதவ் ஏசி மற்றும் படுக்கையை அபகரித்ததாக பாஜக குற்றம் சாட்டுகிறது. தேஜஸ்வி யாதவின் ஃபோபியாவால் பாஜக பாதிக்கப்பட்டுள்ளது. தேஜஸ்வி யாதவிடம் இருந்து ஏசி மற்றும் படுக்கை வேண்டுமென பாஜக விரும்பினால், அதைச் சொல்ல வேண்டும். தேஜஸ்வி யாதவ் அதை டெலிவரி செய்வார்” என்று கிண்டல் அடித்துள்ளார்.