சார்மினார் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய திரிபுரா இளைஞர் கைது: சென்னையில் பரபரப்பு


சென்னை: ஐதராபாத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த சார்மினார் விரைவு ரயில் 10 கிலோ உலர்ந்த கஞ்சா பொட்டலங்களை கடத்திய திரிபுரா மாநில இளைஞரை ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்தனர்.

ரயில்களில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் ஆய்வாளர் சிவநேசன் தலைமையிலான ஆர்பிஎஃப் போலீஸார் இன்று காலை 6.30 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து தாம்பரத்துக்கு புறப்பட்ட சார்மினார் விரைவு ரயில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று காலை 7.20 மணிக்கு வந்தது. இதில் இறங்கிய பயணிகளை கண்காணித்தபோது, ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் பேசியபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து, அவரது பைகளை சோதித்தப்போது, அதில் 10 கிலோ உலர்ந்த கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.5 லட்சம்.

இதையடுத்து, அவரை எழும்பூர் ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அந்த நபர், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோகேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த சாகர்தாஸ் (22) என்பதும், விஜயவாடாவில் இருந்து சார்மினார் ரயிலில் சென்னைக்கு உலர்ந்த கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்து இங்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஆர்பிஎஃப் போலீஸார் ஒப்படைத்தனர்.

x