செங்கல்பட்டு தசரா விழா துயரம்: பொழுதுபோக்கு சாதனத்தில் கை விரல் சிக்கி துண்டான விரல்கள்!


செங்கல்பட்டு: செங்கல்பட்டு சின்னக்கடை வீதியில் நடைபெறும் பத்து நாள் தசரா விழாவில் ஏராளமான கேளிக்கைகள், ராட்சத ராட்டினங்கள் பொழுதுபோக்கு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

அங்கு பனிக்கட்டி வீடு அமைக்கப்பட்டுள்ளது. அதில் பார்ப்பதற்காக சென்ற செங்கல்பட்டு அருகே ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மோகன் - சரோஜினி தம்பதியரின் மகன்‌ 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரதீப் என்பவர் நண்பர்களுடன் சென்று பார்வையிட்டுள்ளார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு இருந்த இயந்திரத்தில் விரல் சிக்கி விரல்கள் துண்டானது.

தற்போது மாணவன் ஆபத்தான நிலையில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு நகர போலீஸார் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி சார்பில் அந்த பொழுதுபோக்கு சாதனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தசரா விழாவை ஆய்வு செய்த செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா பொழுதுபோக்கு சாதனங்களுக்கு உரிய சான்றிதழ் இல்லை என்று கூறியும் ராட்சத ராட்டினங்கள் இயக்குவதற்கு தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தார். அதனையும் மீறி தசரா செயல்படுகிறது. தற்போது பள்ளி மாணவனின் கை விரல்கள் துண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடுகள் இந்த தசரா விழாவில் உள்ளது என இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியகி இருந்தது. அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. வருவாயை நோக்கமாகக் கொண்டு இந்த விழா நடத்தப்படுவதால் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இங்கு உள்ளது. இனியாவது அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

x