போலியான மின்னஞ்சல் அனுப்பி சென்னை தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி


சென்னை: போலியான மின்னஞ்சல் அனுப்பி சென்னையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளருக்கு, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து, ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், அந்நிறுவனம் கோரியிருந்த பொருட்களுக்கான அடக்கவிலை பட்டியலுடன், செலுத்த வேண்டியபணம் ரூ.2,00,10,150-ஐ அமெரிக்காவில் உள்ள ரீஜியன்ஸ் வங்கிக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. தெரிந்த நபரின் முகவரியில் இருந்து இந்த மின்னஞ்சல் வந்ததாலும், முன்னதாக பெறப்பட்ட மின்னஞ்சல்களுடன் அது தொடர்புடையதாக இருந்ததாலும், அந்நிறுவனத்தின் மேலாளர், மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக்கு ரூ.2,00,10,150 பணத்தை பாரத ஸ்டேட் வங்கி மூலம் கடந்த மாதம் 26ம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, மறுநாள், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பணம் கிடைத்து விட்டதா என மேலாளர் கேட்டபோது தான், மின்னஞ்சல் மூலம் மோசடி செய்து மர்ம நபர்கள் பணத்தை பறித்தது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, சென்னை அசோக்நகர் தலைமையக சைபர் கிரைம் தனிப்படை போலீஸார், உள்துறை அமைச்சகம், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரீஜியன்ஸ் வங்கி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து விரைவாக செயல்பட்டு, மோசடி செய்யப்பட்ட முழு தொகையையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் முடக்கியது.

இதையடுத்து, அந்த பணம் விரைவில் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மின்னஞ்சல் நம்பகத் தன்மையை சரி பார்க்காமல், அதிகளவிலான பண பரிவர்த்தனையில் ஈடுபட வேண்டாம் எனவும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

x