இட்லி மாவு தயாரிக்க ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் கைது


கைது செய்யப்பட்டவர்கள்

கும்பகோணம்: திருவிடைமருதுார் வட்டம், ஆடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மொத்த கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம்.

சில நேரங்களில் இரவு நேரமானால், கிடங்குக்கு வெளியே வெளியூருக்கு செல்ல வேண்டி லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி வைத்து விட்டு, ஓட்டுநர்கள் மறுநாள் காலை எடுத்து செல்வார்கள். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) திருவிடைமருதுார் போலீஸார், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கிடங்குக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சிலர் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

இதையடுத்து போலீஸார், ஆட்டோ ஓட்டுநரான சூரியனார்கோவில், வடக்கு தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் (33) மற்றும் லாரி ஓட்டுநராக திருபுவனம், காங்கேயம் பேட்டையச் சேர்ந்த சுபாஷ் (33) ஆகிய இரண்டு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆவணியாபுரம், மதினா தெருவைச் சேர்ந்த முகமது பைசல் (23), என்பவர் இட்லி மாவு மொத்தமாக அரைத்து கடைகளுக்கு விநியோகம் செய்யும் மில் ஒன்று வைத்துள்ளார். இவர் ஏற்கனவே வேறு இட்லி தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு ரேஷன் அரிசியை மொத்தமாக கள்ளசந்தையில் வாங்கி வந்துள்ளதை பார்த்துள்ளார். இதனால், முகமது பைசல் அந்த ரேஷன் அரிசியை மொத்தமாக கொண்டு வந்து தரும் நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், தனியாக இட்லி மாவு அரவை மில்லை தொடங்கியதாக தெரியவந்தது.

இந்த கடத்தல் சில ஆண்டுகளாக நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளதால் லாரி ஓட்டுநர் சுபாஷ் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் முருகனாந்தம், நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் விசாரணை மேற்கொண்டார்.

இதில் லாரி ஒப்பந்தக்காரர் மற்றும் கிடங்கில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும், ரேஷன் அரிசியை மூட்டையோடு விற்பனை செய்து விட்டு, எப்படி கணக்கு காட்டப்படுகிறது என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து முகமது பைசல், கண்ணதாசன், சுபாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 50 கிலோ எடையிலான சுமார் 18 ரேஷன் மூட்டை என 900 கிலோ அரிசி, ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

x