கலசப்பாக்கம் அருகே தீக்காயத்துடன் இளைஞர் உயிரிழப்பு - விசிகவினர் சாலை மறியல்


திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் தீக்காயத்துடன் உயிரிழந்த இளைஞர் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூடுதல் எஸ்.பி., பழனி.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே தீக்காயங்களுடன் உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (32). இவர், தேவனாம்பட்டு கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் தீக்காயங்களுடன் கடந்த செப்.30-ம் தேதி மீட்கப்பட்டார். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இளங்கோவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இளங்கோவன் எரித்துக்கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யாததைக் கண்டித்து உறவினர்கள், தேவனாம்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இளங்கோவன் மரணத்துக்கு நீதி கேட்டும், அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியும், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி, திருவண்ணாமலை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், மண்டல செயலாளர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை, இளங்கோவனின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, காவல் துறையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ்.பி., பழனி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது, தீக்காயங்களுடன் இளங்கோவன் மீட்கப்பட்டு 4 நாட்கள் கடந்தும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

பின்னர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் முடிவுக்கு வந்தது. குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், போராட்டம் தீவிரமடையும் எனக்கூறி விட்டு சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதனால், மற்றொரு தரப்பினர் தேவனாம்பட்டு அருகே நேற்று மாலை மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

x