சரக்கு ஆட்டோ மீது மினி லாரி மோதல் - குலசை அருகே 3 பக்தர்கள் உயிரிழப்பு


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே சரக்கு ஆட்டோ மீது மினி லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு மாலை அணிவதற்காக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கீழச் செக்காரக்குடியைச் சேர்ந்த கிராம மக்கள் 70 பேர் வேன் மற்றும் சரக்கு ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாலை அணிந்து, சுவாமி தரிசனம் முடித்து விட்டு அதே வாகனங்களில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ஆட்டோவில் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயணித்துள்ளனர். கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே வந்தபோது. முன்னால் சென்ற வாகனங்களை முந்திச் செல்ல சரக்கு ஆட்டோ ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியது. ஓட்டுநர் உட்பட ஆட்டோவில் வந்த 9 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த பெருமாள் மகன் பெரும்படையான் (20), ராமலிங்கம் மகன் கிருஷ்ண பெருமாள் (25) மற்றும் ஆதிமூலப் பெருமாள் மகன் வடிவேல் (17) ஆகிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பெரும்படையான், கிருஷ்ண பெருமாள் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவிலும், வடிவேலு நேற்று அதிகாலையிலும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x