‘இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்குகிறார்’ - உதயநிதி குறித்து பேசிய பவன் கல்யாண் மீது காவல் ஆணையரிடம் புகார்!


மதுரை: மதுரை வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக துணை முதல்வர் உதயநிதி குறித்தும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

அவர் பேச்சு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அவரது பேச்சு இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும். பல்வேறு மத மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி, சனாதனம் குறித்து சட்டப்படியே பேசினார். அரசியல் சட்டத்தின் நோக்கமும் சமத்துவ சமூகம்தான். ஆனால், பவன் கல்யாண் அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்.

திருப்பதி லட்டு பிரச்சினையில் எவ்வித தொடர்பும் அற்ற சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக, வன்மத்தைக் கக்கி, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வரை ஒருமையில் பேசிய பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

x