கோவை நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது


கோவை: கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அக்‌சய்காதம் (28). நகை வியாபாரி. இவர், கடந்த மாதம் 9-ம் தேதி சேலம் சென்று நகை வாங்க ஆயத்தமானார். ரூ.51 லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து காந்திபுரம் நோக்கிச் சென்றார். அவர், அவிநாசி சாலைமேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்தனர். அவர்கள், அக்சய் காதமை தாக்கி ரூ.51 லட்சத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து அவர், வெரைட்டி ஹால் ரோடு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், அக்‌சய் காதமுடன் வேலை செய்து வந்த கிருஷ்ணா பட்டேல் மற்றும் அவருடைய நண்பர் விக்ரம் ஜம்பா யாதவ் (28) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவான 2 பேரையும் போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் 2 பேரும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் சென்று, அவர்களை பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பினர். இந்நிலையில், விக்ரம் ஜம்பா யாதவ் கோவை வந்தது போலீஸாருக்கு தெரிந்தது.

இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணா பாட்டிலை போலீஸார் தேடி வருகின்றனர்.

x