பள்ளிப்பட்டு அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை: நகை கடை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது


கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான சிரஞ்சீவி உள்ளிட்ட 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்துடன் போலீஸார்.

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 பவுன் தங்க நகை கொள்ளை வழக்கில் நகை கடை உரிமையாளர், பெண் ஊழியர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு (66). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் வசித்த தன் உறவினர் இறந்ததை அடுத்து, அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 26-ம் தேதி காலை குடும்பத்தினருடன் கே.ஜி.கண்டிகைக்கு சென்றார்.

தொடர்ந்து, விஜயலு, அன்று மாலை குடும்பத்தினருடன் வீடு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலு, வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 51 பவுன் தங்க நகைகள், ரூ. 70 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பொதட்டூர்பேட்டை போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அவ்விசாரணையில், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி (32), ராகவாநாயுடுகுப்பம் பகுதியைச் சேர்ந்த வேணு (35), பூபதி (24), ஆந்திர மாநிலம் - கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23) ஆகிய 4 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அவர்கள் அந்த நகையை கொண்டாபுரத்தைச் சேர்ந்த வாசு (55) என்பவர் கே.ஜி.கண்டிகை பகுதியில் நடத்தும் நகை கடையில், அங்கு பணிபுரியும் அரக்கோணம் அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த சுபா (42) என்பவர் மூலம் ரூ.14 லட்சத்துக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

.இதையடுத்து, சீரஞ்சீவி உள்ளிட்ட 4 பேர் மற்றும் நகை கடை உரிமையாளர் வாசு, ஊழியர் சுபா ஆகிய 6 பேரை இன்று போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை, ரூ.8.85 லட்சம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சீரஞ்சீவி உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

x