ஸ்ரீவில்லிபுத்தூர்: முகமூடி கொள்ளையன் மூர்த்தியை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்திலும் இந்த கும்பல் ஈடுபட்ட நிலையில், மூர்த்தியை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் சிறையில் இருந்த முகமூடி திருடன் மூர்த்தியை காவலில் எடுத்து விசாரித்த குற்றப்பிரிவு போலீஸார், 7 வீடுகளில் திருடிய 47 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

தமிழகம் முழுவதும் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முகமூடி கும்பலை சேர்ந்த தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்த அருண்குமார் (23), சுரேஷ்குமார்(26) ஆகிய இருவரை ஜூன் மாதம் ராஜபாளையம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான மூர்த்தியின் தாய் சீனித்தாய் (53), மனைவி அனிதா பிரியா (29), உறவினர் நாகஜோதி (25), லட்சுமி, மகாலட்சுமி, மோகன் ஆகிய 8 பேரை ராஜபாளையம் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புகள் 150 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பலின் தலைவனான மூர்த்தியை (33) கடந்த ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் ராம்பிரகாஷ் (28) ராஜபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த கும்பல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் 7 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்த மூர்த்தியை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப் பிரிவு போலீஸார், நேற்று காவலில் எடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 47 பவுன் தங்க நகையை மீட்டனர். விசாரணை காலம் முடிந்த நிலையில் இன்று மாலை மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.

x