ஆவடி: அம்பத்தூர் அருகே திருப்பதி திருக்குடை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கொரட்டூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முத்துக் குமார் (47). தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த முத்துக்குமார், திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை பூர்விகமாக கொண்டவர். தற்போது ஆவடி - நேரு பஜார் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்த முத்துக் குமாருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவைக்கு, இந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் காணிக்கையாக செலுத்தப்பட உள்ள வெண்பட்டு திருக்குடைகளின் ஊர்வலம் இன்று கொரட்டூர், பாடி, முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்த ஊர்வலம், இன்று பகல் 12 மணியளவில் அம்பத்தூர் அருகே பாடி - சிடிஎச் சாலை பகுதியில் சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் கொரட்டூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் கடந்த சிறிது நேரத்தில், வெயிலின் காரணமாக மயங்கிய முத்துக்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற முத்துக்குமார், சக போலீஸாரால் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. திருப்பதி திருக்குடை ஊர்வல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உயிரிழந்த சம்பவம், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.