வேலூர்: தென்கடப்பந்தாங்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.7.81 கோடி நிதி முறைகேடு - 2 பேர் கைது


படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியில் இல்லாதவர்கள் பெயரில் சம்பளம் வழங்கியதுடன், உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்றது, வைப்பு நிதியில் கையாடல் செய்தது என ரூ.7 கோடியே 81 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட சங்கத்தின் செயலாளர் மற்றும் எழுத்தரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் நகர கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை அதிகாரிகள் குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், கடந்த 2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாக கணக்கு காட்டி மாதந்தோறும் சம்பள பணத்தில் கையாடல் செய்திருப்பதுடன் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது மற்றும் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிகளை கையாடல் செய்தது என மொத்தம் ரூ.7 கோடியே 81 லட்சத்து 452 தொகையை முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் ஆய்வில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் சங்கர், எழுத்தர் பாரதி என தெரியவந்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிதி முறைகேடு தொடர்பாக வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சங்கர், எழுத்தர் பாரதி ஆகியோரை இன்று (அக்.4) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x