டெல்லி: கலிந்தி குஞ்ச் பகுதியில் நேற்று மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது இளைஞரை குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். மருத்துவரை சுட்டுக்கொன்ற பிறகு அந்த சிறுவன் சமூகவலைதளத்தில் இதனை பதிவிட்டுள்ளான்.
கலிந்தி குஞ்ச் பகுதியில் 55 வயதான யுனானி மருத்துவர் ஜாவேத் அக்தர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவரை சுட்டுக் கொன்ற சிறுவன், குற்றம் நடந்த சிறிது நேரத்திலேயே, "2024 இல் ஒரு கொலையை செய்தேன்" என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
நேற்று (அக்டோபர் 3 ஆம் தேதி) அதிகாலை 1:30 மணியளவில் டெல்லியின் ஜெய்த்பூர் பகுதியில் உள்ள நிமா மருத்துவமனைக்குள், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், சிகிச்சை பெறுவது போல் நடித்து உள்ளே புகுந்தனர். அதில் சிறுவன் ஒருவன், காயமடைந்த தனது கால்விரலில் கட்டுபோடுமாறு ஊழியர்களிடம் சொல்லியுள்ளான். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் மருத்துவர் அக்தரை சுட்டுக்கொன்றனர்.
காவல்துறை விசாரணையின்படி, மருத்துவர் அக்தார் அதிகளவில் சிகிச்சைக் கட்டணம் வாங்கியதால் ஏற்பட்ட மனக்குறையே கொலைக்கான பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 16 வயதுடைய இரண்டாவது சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் முதியோர் இல்லத்தில் உள்ள செவிலியர் மற்றும் அவரது கணவரின் பங்கு குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.