மயிலாடுதுறையில் கூலி தொழிலாளி தற்கொலை: நிதி நிறுவன ஊழியர்களுக்கு எதிராக உறவினர்கள் போராட்டம்


மயிலாடுதுறை: குத்தாலம் அருகே விஷம் குடித்துதற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதே அவரது தற்கொலைக்கு காரணம் என்றுகூறி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கடலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனுசாமி(45). இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர், செப்.26-ம் தேதிவிஷம் குடித்து தற்கொலைக்குமுயன்றதால், திருவாரூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

முனுசாமி தனது குடும்ப தேவைக்காக மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் ரூ.1.20 லட்சம், தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.1.60 லட்சம் கடன்பெற்று, மாதத் தவணையை கட்டிவந்துள்ளார். அண்மையில் விபத்தில் முனுசாமி காயமடைந்ததால், நிதி நிறுவன கடனுக்கான மாதத்தவணையை செலுத்த முடியவில்லை.

இதையடுத்து, நிதிநிறுவனஊழியர்கள் முனுசாமியின் வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டியதால்தான், முனுசாமி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் சேத்திரபாலபுரம் பகுதியில் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி, குத்தாலம் வட்டாட்சியர் சத்தியபாமா ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.

x