கொடைக்கானலில் இறைச்சிக்காக பசு மாடுகளை திருடிய 2 பேர் கைது


கொடைக்கானல்: கொடைக்கானலில் இறைச்சிக்காக பசு மாடுகளை திருடி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் பசு மாடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் எழுந்தது. இதற்கிடையில் கொடைக்கானலைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான சினை பசு மாடு ஒன்று காணாமல் போனது குறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், கொடைக்கானலில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் பகுதி, இறைச்சிக் கடைகள் இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் மாடுகளை கயிறு கட்டி இழுத்துச் செல்வது தெரிந்தது.

வீடியோவில் பதிவான அந்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்ததில், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36), மருதுபாண்டி (35) என்பதும், இவர்கள் 20-க்கும் மேற்பட்ட சினை பசு மாடுகளை திருடிச் சென்று, இறைச்சி கடைகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x