கோவையில் போலீஸாரை மிரட்டிய இளைஞர்கள் கைது - மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு


கோவை: கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இரு தினங்களுக்கு முன் காட்டூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

காரில் இளைஞர்கள் சிலர் மது போதையில் இருப்பது தொியவந்தது. போலீஸார் விசாரித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களிடம் இருந்த செல்போனை போலீஸாரிடம் கொடுத்து, திமுக எம்.பி கனிமொழியின் பி.ஏ பேசுவதாகவும், அவரிடம் பேசுமாறும் கூறியுள்ளனர். தொடர்ந்து அந்நபர்கள் போலீஸாரை அநாகரிகமாக பேசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மதுபோதையில் வந்து, ரகளையில் ஈடுபட்டவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த பாலாஜி, கிரண், சிவானந்தம் என தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கிரண் என்பவர் பேசிய வீடியோ நேற்று வெளியானது. அதில், ‘‘மதுபோதையில் இருந்த நான், போலீஸாரிடம் தகாத முறையில் பேசி விட்டேன். பொது இடத்தில் கனிமொழி எம்.பி.யின் பெயரை கூறியது தவறுதான். அவரது பி.ஏ யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தெரிந்த நபரிடம் போன் செய்து கொடுத்து தான் பேச கூறினேன். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

x