கோவை: ரூ.1.02 கோடி மோசடி புகாரில் தம்பதி கைது


கோவை: கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன்(33). பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரளம் ஆனந்தா நகரை சேர்ந்த அப்பாவு என்கிற விஜயகுமார் (38), அவருடைய மனைவி பிரியதர்ஷினி (37) ஆகியோர் அடிக்கடி வந்து பூஜை பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். அப்போது, தான் பல்வேறு பகுதிகளில் கடைகள் நடத்தி வருவதாகவும், சாமியார் என்றும் விஜயகுமார் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கடைக்கு வந்த தம்பதியினர், தங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால், அதன் மூலம் தினமும் அதிக வருமானம் கிடைக்கிறது. எனவே, நீங்கள் அதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக்கூறியுள்ளனர். அதன்படி தமிழ்பாண்டியன் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதற்கேற்ப விஜயகுமார் லாப தொகையும் கொடுத்துள்ளார்.

பின்னர், அத்தம்பதியினர் தமிழ்பாண்டியனிடம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது இருந்தால் முதலீடு செய்ய சொல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். அதன் பேரில், தமிழ்பாண்டியனின் நண்பர்களான ரஞ்சித், சோமசுந்தரம், சுரேஷ், பொன்னழகு, கண்ணன், பாலசுப்பிரமணி, மருதுபாண்டி, சிவா உள்பட 10 பேர் முதலீடு செய்தனர். அவர்களுக்கும் அந்த தம்பதியினர் ஓரிரு மாதம் மட்டும் லாபத்தொகை கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின்னர் பணம் எதுவும் கொடுக்கவில்லை.

இதையடுத்து, மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சம் மோசடி செய்துள்ளதாக ஆர்.எஸ்.புரம் போலீஸில் தமிழ்பாண்டியன் புகார் அளித்தார். அதன் பேரில், விஜயகுமார் - பிரியதர்ஷினி தம்பதி மீது வழக்குப்பதிந்து விசாரித்த போலீஸார், நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர்.

x