அதிகாரி அறைக்கு பூட்டு போட்டு தகாத வார்த்தையால் பேசிய தாம்பரம் மண்டலக்குழு தலைவர் மீது போலீஸில் புகார் 


கோப்புப் படம்

செம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலக் குழு தலைவராக சுயேட்சையாக வெற்றிப் பெற்ற பிரதீப் என்பவர் உள்ளார். இந்த மண்டலத்தில் திமுக கவுன்சிலர்களின் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக புகார் இருந்து வருகிறது. பத்து மாதங்களாக மண்டலக்குழு கூட்டம் நடத்தப்படாததால் மக்களின் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மேயரின் முன் அனுமதி பெற்று இம்மண்டலத்தில் பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த மண்டலத்தில் உதவி செயற் பொறியாளராக ரகுபதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை மண்டல குழுத் தலைவர் பிரதீப் மதிக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. அக். 1-ம் தேதி மாலை, அவரிடம் தகராறில் ஈடுபட்ட பிரதீப் அறையில் இருந்து அவரை வெளியேற்றி விட்டு அந்த அறைக்கு பூட்டு போட்டுள்ளார். இன்று காலை பூட்டிய அறையை திறக்க மாநகராட்சி செயற் பொறியாளர் ஞானவேல் சென்ற போது பிரதீப் குறுக்கிட்டு தகாத வார்த்தைகளால் பேசி தடுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மண்டலக்குழு தலைவர் பிரதீப் மீது சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாநகராட்சி சீ.பாலச்சந்தர் கூறியதாவது: “உதவி செயற் பொறியாளர் ரகுபதியிடம் 3வது மண்டல குழுத் தலைவர் பிரதீப் தகராறு செய்து அவரை வெளியேற்றி விட்டு அறைக்கு பூட்டு போட்டுள்ளார். ஒரு அதிகாரியின் அறைக்கு பூட்டு போட அவருக்கு அதிகாரம் இல்லை. ஏதாவது புகார்கள் இருந்தால் ஆணையரிடம் புகார் தெரிவித்திருக்க வேண்டும். பூட்டை திறக்க சென்ற செயற்பொறியாளர் ஞானவேலையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் மண்டல குழு தலைவர் பிரதீப் மீது அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்தது தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

x