புழல் சிறையில் புனரமைக்கப்பட்ட வழக்கறிஞர் நேர்காணல் அறை திறப்பு


புழல் மத்திய சிறை-2ல் புனரமைக்கப்பட்ட வழக்கறிஞர் நேர்காணல் அறையை இன்று தமிழக சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

சென்னை: புழல் மத்திய சிறையில் புனரமைக்கப்பட்ட வழக்கறிஞர் நேர்காணல் அறையை இன்று தமிழக சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

சென்னை, புழல் மத்திய சிறை 2ல் சுமார் 3,400-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இதனால் விசாரணை கைதிகளை நேர்காணல் செய்ய வரும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதனால் வழக்கறிஞர்கள் விசாரணை கைதிகளை நேர்காணல் செய்வதில் சில குறைபாடுகள் காணப்பட்டு வந்தன. அதனை சரிசெய்திடும் பொருட்டும் வழக்கறிஞர் நேர்காணல் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் பொருட்டும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பில் வழக்கறிஞர் நேர்காணல் அறை புனரமைக்கும் பணி சமீபத்தில் நடைபெற்று வந்தன.

புதிய கேபின்கள், விசாரணை கைதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் புதிய இருக்கைகள் என, ஒரே நேரத்தில் 50 வழக்கறிஞர்கள், விசாரணை கைதிகளை நேர்காணல் செய்யும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் நேர்காணல் அறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, புனரமைக்கப் பட்ட வழக்கறிஞர் நேர்காணல் அறையை திறந்து வைத்தார்.

மேலும், அவர், புழல் மத்திய சிறை 2ல் மேம்படுத்தப்பட்ட பார்வையாளர் நேர்காணல் முறையை ஆய்வு செய்தார். அது மட்டுமல்லாமல், புழல் மத்திய சிறை 1 (தண்டனை)ல் ’சிறைகளில் கலை’ என்ற சிறைவாசிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களை சீர்திருத்தம் செய்யும் வகையிலான புதிய திட்டத்தின் நிறைவு விழாவும் இன்று நடைபெற்றது.

இதில், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகம் மற்றும் சுமனசா அறக்கட்டளை நிறுவனத்தினர் இணைந்து வழங்கிய ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு ஆகியவை அடங்கிய ஒரு வருட பயிற்சி பெற்ற 40 சிறைவாசிகளுக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்நிகழ்வுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், "செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது மற்ற சிறைவாசிகளுக்கு கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளே அவருக்கும் கடைப்பிடிக்கப்பட்டது. எவ்வித தனி வசதிகளையும் செந்தில் பாலாஜி கோரவில்லை. அவர் சிறையில் கொடுக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டார்" என்றார்.

இந்நிகழ்வுகளில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், சிறைத் துறைத் தலைவர் (தலைமையிடம்) இரா.கனகராஜ், சென்னை சரக சிறைத் துறைத் துணைத் தலைவர் ஆ.முருகேசன், புழல், மத்திய சிறை-1 கண்காணிப்பாளர் இரா.கிருஷ்ணராஜ், சென்னை சுமனசா அறக்கட்டளை நிறுவனர் டி.எம்.கிருஷ்ணா, மாதவரம் எம்எல் ஏ.எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x