கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பூசாரி, தனியார் வங்கி மேலாளரிடம் விசாரணை


கோவை சிபிசிஐடி அலுவலகத்துக்கு இன்று விசாரணைக்கு வந்த தனியார் வங்கி மேலாளர் உள்ளிட்டோர்.

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பூசாரி, தனியார் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று (அக்.03) விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி கோவையில் உள்ள அலுவலகத்துக்கு வரவைத்து விசாரித்து வருகின்றனர். இது தவிர கைதானவர்கள் பயன்படுத்திய செல்போனில் இருந்து யாருக்கு எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், கைதான 10 பேரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வரும் போலீஸார், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து யாருக்கு எல்லாம் பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது, யார் எல்லாம் பணம் அனுப்பி உள்ளனர் என்பது குறித்த விவரங்களை கேட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட 16 வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்த விக்னேஷ்வரன், தனியார் வங்கி மேலாளர் ஒருவர் ஆகியோரை போலீஸார் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

அதன்படி, மேற்கண்ட இருவரும் இன்று (அக்.03) காலை கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸார் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கோயில் பூசாரி விக்னேஷ்வரனிடம், சம்பவம் நடந்த அன்று, எஸ்டேட்டுக்கு வந்தவர்கள், கோயிலுக்கு வந்தார்களா, எத்தனை பேர் வந்தனர், என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். அவர் கூறிய பதில் அனைத்தும் வீடியோவால் பதிவு செய்யப்பட்டது.

அதுபோன்று விசாரணைக்கு ஆஜரான வங்கி மேலாளரிடம், கைதானவர்களில் எத்தனை பேர் உங்கள் வங்கியில் கணக்கு வைத்து உள்ளனர்?, அந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியவர்கள் யார்?, யாருக்கு எல்லாம் பணம் அனுப்பப்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர்ந்து அவர் கூறிய தகவலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்தவுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

x