மதுரையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: துணை மேயர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!


துணை மேயர் நாகராஜன்

மதுரை: மதுரையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை மேயர் நாகராஜன், அவரது தம்பி உட்பட 5 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா (62). இவரது மகன் முருகானந்தம் அப்பகுதியில் சலூன் கடை நடத்துகிறார். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற கோழிக்குமார் என்பவரிடம் வீட்டை அடமானமாக வைத்து வசந்தா ரூ.10 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மேலும், ரூ.15 லட்சம் கொடுப்பதாகவும், வீட்டை தனக்கு கிரயம் செய்து கொடுக்குமாறும் குமார் கேட்டுள்ளார்.

இதற்கு வசந்தா மறுத்துவிட்டதால் குமார், முத்துச்சாமி, வாய் கணேசன் ஆகியோர் கடந்த மே மாதம் வசந்தா வீட்டுக்குச் சென்று, அத்துமீறி நுழைத்து வசந்தாவின் மகனை தாக்கியுள்ளனர். இதுபற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் குமாருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜனின் தம்பி ராஜேந்திரன் வசந்தா வீட்டுக்குச் சென்று, வீட்டை குமாருக்கு கிரயம் செய்து கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். இதற்கிடையில் துணை மேயர் நாகராஜனும் அங்கு வந்துள்ளார்.

அவரும் வசந்தாவை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதை வசந்தாவின் மகள் பிரியா தட்டிக் கேட்டபோது, அவரையும் திட்டியுள்ளனர். மேலும், அங்கு வந்த துணை மேயரின் நண்பர் முத்து என்பவரும் வசந்தாவின் மகன், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் துணை மேயர் உள்ளிட்டோர் மீது வசந்தா புகார் கொடுத்துள்ளார். அதற்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை வளர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வசந்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முடி திருத்துவோர் சங்கத்தினரும் மதுரை ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் மாறி, மாறி புகார் கொடுத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில், தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி வசந்தா மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அவரது தம்பி ராஜேந்திரன், குமார், புரோக்கர் முத்துச்சாமி, முத்து ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

x