பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.20,000 லஞ்சம்- லால்குடியில் துணை வட்டாட்சியர் கைது


துணை வட்டாட்சியர் ரவிக்குமார்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் நில பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று கைது செய்தனர்.

லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் 2002ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை தனது தந்தை கணேசன் பெயரில் வாங்கியுள்ளார். இந்த நிலத்துக்கான பட்டாவில் நிலத்தை விற்பனை செய்தவர் பெயர் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என தவறுதலாக இடம்பெற்றிருந்தது. இந்த பெயரை மாற்ற வேண்டி இந்தாண்டு மார்ச் 5ம் தேதி அன்று லால்குடி கோட்டாட்சியருக்கு மோகன் விண்ணப்பித்தார்.

இந்த மனுவை தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் சரி பார்த்து, தொடர் நடவடிக்கைக்காக லால்குடி துணை வட்டாட்சியருக்கு அனுப்பியுள்ளார். விண்ணப்பித்து 4 மாதங்கள் ஆன பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் மோகன் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை தொடர்ந்து பல முறை சந்தித்து தனது மனுவை பைசல் செய்யுமாறு கேட்டுள்ளார்.

இறுதியாக செப்.26ம் தேதி லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மோகன், துணை வட்டாட்சியரை சந்தித்து தனது மனு தொடர்பாக பேசியுள்ளார். அப்போது துணை வட்டாட்சியர் ரவிக்குமார் மனுவை பரிந்துரை செய்து அனுப்ப ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என தெரிவித்த மோகனிடம், இறுதியாக ரூ.20 ஆயிரம் தந்தால் தான் மனுவை பரிந்துரை செய்வேன் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதனடிப்படையில் இன்று லால்குடி வட்டாட்சியர் அலுவலகம் சென்ற மோகன், ரூ.20 ஆயிரத்தை ரவிகுமாரிடம் அளித்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீஸார், லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் ரவிகுமாரை (60) கையும் களவுமாக பிடித்து கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x