திருச்சியில் 18 நாட்களுக்கு முன்பு மாயமான என்ஐடி மாணவியின் நிலை என்ன?


ஓஜஸ்வி குப்தா.

திருச்சி: கடந்த 18 நாட்களுக்கு முன்பு மாயாமான திருச்சி என்ஐடி மாணவியை இன்னும் ஒரு வாரத்தில் கண்டுபிடித்து விடுவோம் என போலீஸார் தெரிவித்தனர். திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஓஜஸ்வி குப்தா(22) என்ற மாணவி, கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த செப்.15-ம் தேதி விடுதியை விட்டுச் சென்ற மாணவி, மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே அந்த மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், ‘ஆணாதிக்கம் செலுத்தும் உலகின் சோகமான உண்மை’ என்ற தலைப்பிட்டு, எந்தவொரு பெண்ணும் அழகாக இல்லாவிட்டால், ஆண்கள் தன்னைப் பின்பற்றுவது அல்லது அவரது தலைமையை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்’ என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த மாணவி கல்லூரியில் வகுப்புத் தலைவரான பிறகு எதிர்கொண்ட மன சித்ரவதை மற்றும் அழுத்தம் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறும்போது, ‘‘காணாமல் போன மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து இதுவரை பணம் எடுக்கவில்லை.

இருந்தாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் மாணவியை கண்டுபிடித்து விடுவோம்’’ என்றனர்.
இதற்கிடையே, தங்களது மகளை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய பிரதேச முதல்வரை மாணவியின் பெற்றோர் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

x