சத்தீஸ்கர்: சக்தி மாவட்டத்தில் உள்ள சாபோரா என்ற ஊரில் போலியான எஸ்பிஐ வங்கியை தொடங்கி, மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
வங்கி பரிவர்த்தனைகளில் மோசடி, போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல் போன்ற நிதி மோசடிகள் சமீபத்திய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், சத்தீஸ்கரில் ஒரு போலியான வங்கியையே திறந்து மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில், சக்தி மாவட்டத்தில் உள்ள சாபோரா என்ற சிறுகிராமத்தில், நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் போலியான கிளை சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியில் செய்யப்பட்ட நியமனங்கள் உண்மையானவை என்று நம்பிய ஆறு பேர் பணியில் இணைந்துள்ளனர்.
10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த புதிய கிளை, உண்மையான வங்கியை போலவே செயல்பட்டுள்ளது. இந்த மோசடியை அறியாத கிராம மக்கள், கணக்கு துவங்கவும், பரிவர்த்தனை செய்யவும், வங்கிக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல இவ்வங்கியில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களும் புகழ்பெற்ற வங்கியில் வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த வங்கியில் பணியில் சேர 2 முதல் 6 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27 அன்று, அருகிலுள்ள டப்ரா எஸ்பிஐ கிளையின் மேலாளர் சந்தேகத்தை எழுப்பியதை அடுத்து, உயர் போலீஸ் மற்றும் எஸ்பிஐ அதிகாரிகள் இந்த வங்கிக்கு விசாரணைக்கு வந்துள்ளனர். அப்போது சாபோராவில் உள்ள "எஸ்பிஐ கிளை" மோசடியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கே வழங்கப்பட்ட பணிநியமனங்கள் போலியானது எனவும் தெரியவந்தது.
போலி எஸ்பிஐ கிளையின் மேலாளராகக் காட்டிக் கொண்ட ரேகா சாஹு, மந்திர் தாஸ் மற்றும் பங்கஜ் உட்பட இந்த மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த போலி வங்கி கிளை ஒரு வாடகை வளாகத்தில் இயங்கியுள்ளது. சபோரா கிராமத்தைச் சேர்ந்த தோஷ் சந்திரா என்பவருக்குச் சொந்தமான வாடகை வளாகத்தில் 7,000 ரூபாய் மாத வாடகையில் இந்த போலி வங்கி இயங்கியுள்ளது.
நல்வாய்ப்பாக உடனடியாக இந்த போலி வங்கி குறித்து தெரியவந்தது. ஒருவேளை இந்த வங்கி தொடர்ந்து நடந்திருந்தால், பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து கோடிக்கணக்கில் ஏமாற்றப்பட்டிருப்போம் என்று சபோரா கிராமவாசி ராம் குமார் சந்திரா கூறினார்.