லக்னோ: திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், இன்சூரன்ஸ் பணத்துக்காக இளம் பெண்ணை கொன்ற வழக்கில் கணவர் மற்றும் மாமனாருடன் சேர்ந்து
‘ஸ்கெட்ச்’ போட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சன்பூர் மாட்டியரியில் வசிக்கும் அபிஷேக் சுக்லா(32) என்பவர், ஏப்ரல் 2022 இல் பூஜா யாதவ் (28) என்பவரை மணந்தார். இது சுக்லாவின் இரண்டாவது திருமணம் ஆகும். திருமணமான ஒரு வருடத்திற்குள், சுக்லா பூஜாவின் பெயரில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி, நான்கு கார்கள் மற்றும் இரண்டு பைக்குகள் தவணைகளில் வாங்கினார். மேலும், பூஜாவின் பெயரில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டு பாலிசியும் எடுத்தார். இதனையடுத்து பூஜாவை கொல்ல சதி செய்யத் தொடங்கிய அவர், அந்த கொலையை எப்படி விபத்து போல செய்வது என்றும் ஸ்கெட்ச் போட்டார்.
இதன்படி கடந்த மே 20, 2023 அன்று, அவரது மாமனார் ராம் மிலன், மருந்து வாங்குவதாக கூறி பூஜாவை வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் சாலையில் சென்றபோது, ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் பூஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் யாருக்கும் சந்தேகம் வராததால் விபத்து வழக்காக இது கருதப்பட்டது. குற்றம் நடந்த இடத்திலிருந்து ஓட்டுநர் தீபக் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் நவம்பர் 2023 இல் இறந்த பூஜா யாதவ் பெயரில் தாங்கள் வாங்கிய ஆயுள் காப்பீட்டு பாலிசி மற்றும் வாகன கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தபோது, அபிஷேக் சுக்லா காவல்துறையின் விசாரணையின் கீழ் வந்தார். இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்தது, இதனையடுத்து காவல்துறை தனது விசாரணையை தொடங்கியது
இதனையடுத்து பூஜா விபத்தில் கொல்லப்பட்ட கார் ஓட்டுநர் வர்மாவின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ததில், பூஜாவின் கணவர் அபிஷேக் மற்றும் மாமனார் ராம் மிலன் ஆகியோருடன் அவர் உரையாடியதற்கான ஆதாரம் கிடைத்தது. கடுமையான விசாரணையில், வர்மா நடந்த உண்மையை வெளிப்படுத்தினார்
செவ்வாய்கிழமையன்று போலீசார் வழக்கை விசாரித்து, குல்தீப் சிங் (27), திட்டத்திற்கு ஆலோசனை வழங்கிய வழக்கறிஞர் அலோக் நிகாம் (38) மற்றும் போலி டிரைவர் தீபக் வர்மா (25) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அலோக் மற்றும் தீபக் ஆகியோர் 2022 இல் பெண்ணின் திருமண சடங்குகளில் நேரில் பார்த்த சாட்சிகளாகவும் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், பூஜா யாதவின் கணவர் அபிஷேக், மாமனார் ராம் மிலன் உட்பட மூன்று குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.