ஆலங்காயம்: ஆலங்காயம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத் ராவ்(82). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சந்திராபாய் (75). இவர்களுக்கு சீனிராவ் (52) என்ற மகனும், லட்சுமிராவ் (47) என்ற மகளும் உள்ளனர். லட்சுமிராவ் திருமணம் முடிந்து குடும்பத்தாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். சீனிராவ் திருமணம் முடிந்து குடும் பத்தாருடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக விஸ்வநாத்ராவ் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த பிறகு சந்திராபாய் தனது வீட்டில் தனியாகவே வசித்து வந்தார். மகன் மற்றும் அவரது குடும்பத்தார் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம். கணவரின் ஓய்வூதியம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து சந்திராபாய் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், சந்திராபாய் மகள் லட்சுமிராவ் நேற்று காலை தனது தாயாரை கைபேசி வாயிலாக அழைத்துள்ளார். அவர் கைபேசியை எடுக்காததால் அக்கம், பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்று பார்த்தபோது முகம், தலை, கழுத்து பகுதியில் ரத்தக் காயங்களுடன் சந்திராபாய் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் சந்திராபாயின் மகன் சீனிராவ் மற்றும் மகள் லட்சுமி ராவ் மற்றும் ஆலங்காயம் காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், ஆலங்காயம் காவல் ஆய்வாளர் ஜெய்கீர்த்தி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு சந்திராபாய் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துரிதப்படுத்தினர். பிறகு, திருவண்ணாமலையில் இருந்து மோப்ப நாய் வீரா ராஜபாளையத்துக்கு வரவழைக்கப்பட்டது.
மோப்ப நாய் வீரா மூதாட்டி சந்திராபாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே, சந்திர பாய் பயன்படுத்தி வந்த அவரது கைபேசி வீட்டில் இருந்து மாயமாகி இருந்தது. அந்த எண்ணின் சிக்னல் வைத்து விசாரித்தபோது நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து அந்த கைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சந்திராபாய் வீட்டில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அதேநேரத்தில், உயிரிழந்த சந்திராபாய் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவை அப்படியே இருந்தன.
மேலும், இந்த வழக்கில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப் பாளர் விஜயகுமார் தலைமையில் ஒரு தனிப்படையும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆலங்காயம் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படை என மொத்தம் 4 தனிப்படைகளை அமைத்து உண்மை கொலையாளிகளை கைது செய்ய எஸ்.பி., ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டுள்ளார்.