வடமாநில கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் போலீஸாருக்கு பரிசு வழங்கிய டிஜிபி!


ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்களைக் கைது செய்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருடன் டிஜிபி சங்கர் ஜிவால், ஆட்சியர் ச.உமா, ஐஜி செந்தில்குமார், டிஐஜி உமா. எஸ்பி ராஜேஷ்கண்ணன்.

நாமக்கல்: ஏடிஎம் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களைக் கைது செய்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை பாராட்டி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ரொக்கப் பரிசு வழங்கினார். கேரள மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்றது. அவர்களை நாமக்கல் மாவட்ட போலீஸார் சுற்றி வளைத்தனர்.

அப்போது, காவல் துறை யினரைக், கொள்ளையர்கள் இருவர் தாக்கிவிட்டு, தப்ப முயன்றபோது நடந்த என்கவுன்ட்டரில் கொள்ளை யன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தவர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதில், கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் இருவரையும் நேற்று தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து, மலர் கூடை வழங்கி நலம் விசாரித்தார். பின்னர் அவர்களை பாராட்டி அவர்களது குடும்பத்தினரிடம் ரொக்கப் பரிசு வழங்கினார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன், டிஎஸ்பி-க்கள் இமயவரம்பன் (திருச்செங்கோடு), முருகேசன் (நாமக்கல் குற்றப் பிரிவு), ராஜா (சங்ககிரி) ஆகியோரைப் பாராட்டி தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கினார்.

மேலும், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரங்கசாமி உள்ளிட்ட 19 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறும்போது, “வெப்படை அருகே ஏடிஎம் கொள்ளையர்களை துரத்திப் பிடித்து கைது செய்த சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழக காவல்துறைக்கே பெருமை” என்றார்.

இந்நிகழ்வில், கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் ஆட்சியர் ச.உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

x