சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!


சென்னை: அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையிலும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையிலும் பேசிய மகாவிஷ்ணுவுக்கு, சென்னை முதன்மை அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 'பரம்பொருள்' அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் கடந்த 28-ம் தேதி சொற்பொழிவாற்றினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார். மேலும், தனது பேச்சு திரிக்கப்பட்டதாகவும், முழு உரையைக் கேட்காமல் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் மகாவிஷ்ணு கூறி இருந்தார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மகா விஷ்ணுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

x