பள்ளிகளை தொடர்ந்து மதுரையில் 4 பிரபல ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்


படம்: கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரையில் பள்ளிகளை தொடர்ந்து 4 பிரபல ஹோட்டல்களுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை கடந்த 2 நாளுக்கு முன்பு ஒரே நேரத்தில் மத்திய அரசு பள்ளி உட்பட 4 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் சோதனையில், அது வெறும் புரளி எனத் தெரியவந்தது. இந்த நிலையில், மதுரையிலுள்ள 4 பிரபல ஹோட்டல்களுக்கும் இ-மெயில் மூலம் தனித் தனியே இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றி மாநகர காவல் துறையினருக்கு ஹோட்டல் நிர்வாகங்கள் தரப்பிலிருந்து தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியிலுள்ள ஜெஸி ரெஸிடென்ஸி, விமான நிலையம் சாலையிலுள்ள அமீகா, பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுரா ரெஸிடென்ஸி, காளவாசல் பகுதியிலுள்ள ஜெர்மானுஸ் ஆகிய 4 ஹோட்டல்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ராமசாமி தலைமையில் அப்பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர் நபர்கள் தங்கிய அறைகள் உட்பட ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அங்கு தங்கியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் அறைகளை காலி செய்துவிட்டும் வெளியேறினர். பள்ளிகளை தொடர்ந்து பிரபல ஓட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது மதுரை போலீஸாரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

இதுபற்றி போலீஸார் கூறுகையில், "ஏற்கெனவே பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மெயில் அனுப்பியவர்களின் முகவரியை ஆய்வு செய்ததில் அவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் போல் தெரிகிறது. அது போலி முகவரியாகவும் கண்டறியப்படுகிறது. இணையதளத்தில் ஓட்டல்கள், பள்ளிகளின் பெயர், மெயில் முகவரிகளை அறிந்து, வதந்தியைப் பரப்பவும், பதற்றமான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும் இச்செயலில் ஈடுபடுகின்றனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" என்று போலீஸார் கூறினர்.

x