போலி சான்றிதழ் மூலம் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த போலி மருத்துவர்கள்: ராஜஸ்தான் அதிர்ச்சி


ஜெய்பூர்: ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலில் பல தகுதியற்ற நபர்கள் போலி ஆவணங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி மருத்துவர்களாகப் பதிவுசெய்துள்ள முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முறையாக மருத்துவப் பட்டம் பெறாமல் ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த பல போலி மருத்துவர்களின் நீண்ட பட்டியல் சமீபத்தில் வெளியானது. அவர்களில் பலர் மருத்துவர்கள் போலவே பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர்.

ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலின் பதிவு செயல்முறையின் படி, மருத்துவர்களாக பதிவு செய்வோரின் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும். ஏற்கெனவே பிற மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், தங்களின் தகுதிக்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும், அவை முறையான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலில் போலி மருத்துவர்கள் பலர், போலியான பதிவு சான்றிதழ்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ்களின் நகல்களை சமர்ப்பித்துள்ளனர். அதை ஆர்எம்சி சரிபார்க்காமல் பதிவு செய்துள்ளது.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்வ்சார் அமைத்த 5 பேர் கொண்ட குழுவின் இடைக்கால அறிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் டாக்டர் ராஜேஷ் சர்மா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல உதவி நிர்வாக அதிகாரி அகிலேஷ் மாத்தூர் மற்றும் இளநிலை உதவியாளர் ஃபர்ஹான் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சவாய் மான்சிங் மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கிர்தார் கோபால் கோயலுக்கு ராஜஸ்தான் மருத்துவ கவுன்சிலின் பதிவாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக சட்டரீதியாக விசாரணை நடத்தப்படும் என்று ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. "இந்த வழக்கில் ஏதேனும் ஊழல் கண்டறியப்பட்டாலோ அல்லது அரசு ஊழியர்கள் ஊழலில் ஈடுபட்டாலோ, நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்குவோம்" என்று ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பணியகத்தின் டிஜி டாக்டர் ரவி பிரகாஷ் மெஹர்தா தெரிவித்தார்.

x