மேட்டூர் அருகே சிறுத்தையை சுட்டுக் கொன்ற ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சிறுத்தையை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்

மேட்டூர்: மேட்டூர் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் 3 வாரத்திற்கு மேலாக சிறுத்தை ஒன்று கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடியது. இதில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி நாய்களையும் கொன்றுள்ளது. இந்த பகுதிகளில், உதவி வனபாதுகாவலர் செல்வகுமார் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முகாமிட்டு, சிறுத்தையை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுத்த நிலையில், கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. பின்னர், கால்நடை மருத்துவர்களை கொண்டு சம்பவ இடத்திலேயே சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கியால் சுட்டு கொன்று, கட்டையால் தாக்கியுள்ளனர். இதையடுத்து சிறுத்தையை கொன்ற மர்ம நபர்கள் குறித்து தனிப்படை அமைத்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொளத்தூர் காவல் நிலையத்தில் நாட்டு துப்பாக்கி பயன்படுத்தும் சந்தேகப்படும்படியான நபர்கள், வேட்டைக்கு செல்லும் நபர்களின் விவரங்களை கேட்டு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில், சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தின்னப்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் முனுசாமி உள்பட 3 பேரை பிடித்து சேலத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சிறுத்தை உயிரிழந்த பகுதியில் சில தடயங்களும், செல்போன் டவரில் பதிவான எண்ணைகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சிறுத்தையை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒப்புக் கொண்டதையடுத்து, தின்னப்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் முனுசாமி (49), பூதப்பாடியை சேர்ந்த சசிகுமார் (40), பெரிய கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா (45) ஆகியோரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர். பின்னர், மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வனத்துறை விசாரணையில், 3 பேரும் கடந்த 25ம் தேதி அதிகாலை நாட்டு துப்பாக்கியால் சிறுத்தையை சுட்டதுடன், அதற்கு உயிர் இருப்பதை அறிந்து கட்டையால் சிறுத்தையின் தலையை பலமாக தாக்கி கொன்றதும் தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு: சிறுத்தையை கொன்ற வழக்கில் 3 பேர் கைதான தகவல் கிராம மக்களுக்கு தெரிந்தது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏடிஎஸ்பி பாலகுமார் தலைமையில் 2 டிஎஸ்பிகள், 4 காவல் ஆய்வாளர்கள் உள்பட 150 போலீஸார் தின்னப்பட்டி, புதுவேலமங்கலம், வெள்ளகரட்டூர், கொளத்தூர் வனத்துறை சோதனை சாவடி, மேட்டூர் வனச்சரக அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

x