மதுரையில் இப்படியும் நூதன மோசடி...சினிமா ஷூட்டிங் அழைத்துச் சென்று ஊதியத்தைச் சுரண்டிய புரோக்கர்கள்!


மதுரை: சினிமா ஷூட்டிங் அழைத்துச் சென்று அன்றாடங்காய்ச்சிகளின் ஊதியத்தைச் சுரண்டிக்கொண்டு தப்பிய புரோக்கர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரைக்கு வேலை தேடி வரும் பலர் மதுரை ரயில் நிலைய முன் பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தி தூங்குகின்றனர். பகலில், கிடைக்கும் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் ரயில் நிலைய முகப்புப் பகுதிக்கு வந்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மதுரை ரயில் நிலையப் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களை சினிமாவில் துணை நடிகர்களாக நடிக்க வைக்க, புரோக்கர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இதன்படி, மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த இருவர் மதுரை ரயில் நிலையம் முன்பாகவும், சாலையோரங்களிலும் தங்கியிருந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை ராமேசுவரம் மண்டபம் பகுதியில் நடந்த தமிழ் சினிமா ஷூட்டிங் ஒன்றுக்காக 20 நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஷூட்டிங் முடிந்த பிறகு அவர்களை நேற்று மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் மதுரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வெறும் ரூ.300 மட்டும் கையில் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்றவர்கள் மீதித் தொகையை தராமல் ஏமாற்றிச் சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்டோர் புலம்புகின்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், “கடந்த 20 நாட்களுக்கு முன்பு எங்களை மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு புரோக்கர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு தங்கவைத்து இரவில் மட்டும் உணவு வழங்கி, நடிக்க வைத்தனர். பகல் நேரங்களில் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து அவர்கள் சொன்னபடி நடித்தோம். ஷூட்டிங் முடிந்து, மதுரை ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டு எங்களுக்கு பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் தப்பிவிட்டனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் அந்த இரண்டு புரோக்கர்கள் மீது புகார் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குநரிடம் கேட்டபோதும், எங்களுக்குரிய சம்பளத்தை 2 முகவர்களிடம் கொடுத்துவிட்டதாக கூறுகிறார். இரவில் தூங்காமல் பசி, பட்டினியுடன் நடித்தோம். அப்படி உழைத்த எங்களது பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டனர். ஏற்கெனவே ஒருமுறையும் இது போன்று நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இந்த மோசடி பற்றி திலகர் திடல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

x