சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - இடைத்தரகரிடம் ரூ.3.28 லட்சம் பறிமுதல்


பிரதிநிதித்துவப் படம்

சிவகங்கை: சிவகங்கை வட்டார போக்குவரத்துக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தரகராக செயல்பட்ட போக்குவரத்து கழக ஊழியரிடம் இருந்து ரூ.3.28 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் எடுக்க வருவோரிடம் இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று சிவகங்கை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜா முகமது உள்ளிட்டோர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ராம கிருஷ்ணனை (54) பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் ரூ.3.28 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில், அவர் அரசுப் பேருந்துகளை பதிவு செய்வது, உரிமம் பெறுவது போன்ற பணிகளை செய்வதற்காக அரசுப் போக்கு வரத்துக் கழகத்தால் நியமிக்கப்பட்டவர் என்பதும், அதைப் பயன்படுத்தி அவர் இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், வட்டார போக்குவரத்துக் கழக அலுவலக லாக்கரில் இருந்து கணக்கில் வராத ரூ.3,250-யையும் கைப்பற்றினர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x