‘புதுச்சேரி, காரைக்காலில் கோயில் சொத்து அபகரிப்பு’- சிபிஐ விசாரணை கோரும் இந்து முன்னணி


புதுச்சேரி: கோயில் சொத்து அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்து முன்னணி தரப்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுவை இந்து முன்னணி தலைவர் சனில்குமார் ஆளுநர் கைலாஷ் நாதனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ”புதுச்சேரியில் கோயில் சொத்துகள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது. புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலின் ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்துகள் போலி ஆவணம் மூலம் கொள்ளையடிக்கப்பட்டது. பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மீது சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. புதுவையில் தொடர்ந்து கோயில் சொத்துகள் அபகரிக்கப்பட்டு வருகிறது.

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம், மனைகளாக பிரிக்கப்பட்டு போலி பட்டா மூலம் பலருக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளனர். காவல்துறை இதில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. கருவடிகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஆயிரம் சதுர அடி நிலம் முக்கிய வழக்குகளில் கைதானவருக்கு முறைகேடாக குத்தகை விடப்பட்டுள்ளது.

பிள்ளைத் தோட்டம் கங்கை முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் முருங்கப்பாக்கத்தில் உள்ளது. இந்த இடம் மனைகளாக பிரித்து முறைகேடாக விற்கப்படுகிறது. கடந்த காலங்களிலும் கோயில் சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே, கோயில் சொத்துகள் அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார்.

x