ஏடிஎம் பணம் கொள்ளை சம்பவத்தின் பின்னணி - நாமக்கல் போலீஸ் புதிய தகவல்


நாமக்கல்: ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான வடமாநில கொள்ளை யர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த செப். 27-ம் தேதி அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.65 லட்சத்தை வடமாநில கும்பல் கொள்ளையடித்தது. பின்னர் அவர்கள் கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்றபோது, குமாரபாளையம் அருகே நாமக்கல் மாவட்ட போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, நடந்த என் கவுன்ட்டரில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் (37) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த முகமது ஹஸ்ரு (எ) அஜார் அலி (30) கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன் கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக வெப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சேலம் சரக டிஜஜி உமா உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமை யில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன் கூறியதாவது: கேரள மாநிலத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் தொடக்கத்தில் லாரிகளைத் திருடி வந்துள்ளனர். அப்போது, கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கும்பலைச் சேர்ந்த முகமது இக்ரம் மீது மட்டும் மேற்கு வங்க மாநிலத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு அவர் தனது பெயரை அக்ரம் என மாற்றிக் கொடுத்துள்ளார். இக்கும்பலைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையர்கள். லாரியை திருடிய இக்கும்பல் ஒரு கட்டத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையிலும் ஈடுபடத் தொடங்கினர்.

இதில் சிக்கல்களை அதிகம் எதிர் கொள்ள வேண்டியுள்ளதாகக் கருதிய இக்கும்பல் சைபர் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் சுட்டதில் காலில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வரும் அஜார் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், சிறையில் அடைக்கப்படவில்லை. சிகிச்சைக்குப் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

மேலும், கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இக்கும்பலில் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்ய ஹரியானா மாநிலத்துக்குத் தனிப்படையினர் செல்ல உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

x