மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பொது கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூல்: ஒப்பந்ததாரர், ஊழியர் மீது வழக்குப் பதிவு 


கோப்புப் படம்

மதுரை: மாட்டுத்தாவணி பேருந்து நிலைய பொதுக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஒப்பந்ததாரர், ஊழியர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 32 -ல் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளது. இப்பேருந்து நிலைய பொது கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக சிறுநீர் கழிக்க ரூ.2, மலம் கழிக்க ரூ.5, குளிப்பதற்கு ரூ. 10, என தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இக்கழிப்பறைகளில் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில் மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்குமார் என்பவர் பொதுமக்கள் கழிப்பறைக்கு சென்று பயன்படுத்த கேட்டபோது, கழிப்பறை கட்டணம் வசூலிப்பவர் சிறுநீர் கழிக்க, நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக ரூ.10 கேட்டுள்ளனர். இது குறித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் இருவர் மீது மாட்டுத்தாவணி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாநகராட்சி பகுதியில் செயல்படும் கட்டண கழிப்பறைகளில் விதிமுறை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மாநகராட்சி பொது கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள், பயணிகள் புகார் மைய தொலைபேசியிலும் (78716 61787) அல்லது வாட்ஸ் அப்-பிலும் புகார் அளிக்கலாம் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

x