மருமகளை வெட்டிய மாமனாருக்கு 3 ஆண்டு சிறை @ ராமநாதபுரம்


துரைப்பாண்டி

ராமநாதபுரம்: மண்டபம் அருகே மருமகளை வெட்டிய மாமனாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே குஞ்சார்வலசையை சேர்ந்தவர் துரைப்பாண்டி(66). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அப்பகுதியில் வீடு கட்டியுள்ளார். அப்போது பணத்தேவைக்காக, தனது மருமகள் முருகேஸ்வரியிடம் தங்க நகை வாங்கி, வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். வீடு வேலை முடிந்த நிலையில் முருகேஸ்வரி தங்க நகையை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி முருகேஸ்வரியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து மண்டபம் போலீஸார் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

இவ்வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று (செப்.30) தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் துரைப்பாண்டிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

x