நாமக்கல் என்கவுன்ட்டரில் காயமடைந்த ஹரியானா கொள்ளையனின் வலது முழங்கால் நீக்கம்


கோவை: நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரியானா கொள்ளையனின் வலது முழங்கால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருச்சூரில் தொடர்ச்சியாக மூன்று ஏ.டி.எம்-களில் பணம் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னரில் தப்ப முயன்ற ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையன் ஜூமாந்தின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸார் சுட்டதில் உயிரிழந்தார். மேலும், ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர். இதில் அஜார் அலி (30) வலது காலில் குண்டு காயத்துடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, அஜார் அலியிடம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி நேற்று 4 மணி நேரம் வாக்கு மூலம் பெற்றார். இந்நிலையில் அஜார் அலியின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அஜார் அலியின் காலில் ரத்த நாளங்கள் முழுவதும் சேதமடைந்த நிலையில் சதை பகுதியில் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அவரது வலது முழங்கால் பகுதி இன்று அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

இது குறித்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, "நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரின் வலது காலில் ரத்த நாளங்கள் சேதமடைந்திருந்தது. இதன் மூலம் சதை பகுதி பாதிக்கப்பட்டு நோய்த் தொற்று ஏற்பட்டு உடலில் உள்ள இதர உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. எனவே அவரின் உயிரை காப்பாற்றும் வகையில் வலது முழங்கால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது" என்றனர்.

x