கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள, டார்னிங்டன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சசி (38). பெயிண்டர். இவர் நேற்று (செப்.29) தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்துள்ளார்.
அங்குள்ள கருப்பராயன் கோயில் அருகே வந்த போது, வாகனம் பழுதானது. இதையடுத்து அவர் நண்பருடன் சேர்ந்து வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்தார். இவர்கள் உதகை சாலை அருகே வந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சசியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். சசி, பணம் தர மறுத்துள்ளார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்களில் ஒருவர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சசியை குத்திவிட்டு தப்பினார். சசியை அவருடன் வந்த நண்பர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து சசி கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் குத்திவிட்டு தப்பியவர்கள் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூர்யா (21), அரவிந்தன் (24), நிஷார் (23) ஆகியோர் எனத் தெரிந்தது. இதில் தொடர்புடைய அரவிந்தன், நிஷார் ஆகியோரை போலீஸார் நேற்று (செப்.29) கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சூர்யாவை போலீஸார் தேடி வந்தனர்.
இன்று (செப்.30) பவானியாற்று பாலம் அருகே சூர்யா பதுங்கியிருந்தார். அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றனர். அப்போது சூர்யா பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். அச்சமயத்தில் சூர்யாவின் வலது கால் முறிந்தது. இதையடுத்து போலீஸார் சூர்யாவை கைது செய்தனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யா மீது வழிப்பறி, திருட்டு என 16க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.