5 வயது யுகேஜி மாணவிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்: 10ம் வகுப்பு மாணவன் கைது


மத்திய பிரதேசம்: ரத்லம் நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் ஐந்து வயது யுகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 10ம் வகுப்பு மாணவனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ரத்லம் நகரில் செப்டம்பர் 27 அன்று பள்ளி வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள காவலாளி அறையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன், யுகேஜி படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியில் வந்தது. குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவர் பள்ளியில் பணிபுரியும் காவலாளியின் மகன் ஆவார்.

இது தொடர்பாக பேசிய காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் ராகேஷ் காக்கா, "குற்றம் சாட்டப்பட்டவர் அதே பள்ளியின் மற்றொரு கிளையில் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். யுகேஜி படிக்கும் தனது மகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான்" என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது பிஎன்எஸ் பிரிவு 65-II (பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது), பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மாநிலத்தின் மகள்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

x